காதல் கொசுக்கள்.

Filed in சிறுகதை முயற்சிகள் on Nov 12th 2008

என் காருக்குள்ள ஒரு ஜோடி காதல் கொசுக்கள் இருந்துச்சு. ரொம்ப அன்யோன்யமான கொசுக்கள். அன்றில் பறவைகள் போல ஒன்ன விட்டு ஒன்னு பிரியவே பிரியாத கொசுக்கள். சேர்ந்தேதான் பறக்கும் சேர்ந்தேதான் உக்காரும், சேர்ந்தேதான் கடிக்கும், சேர்ந்தே எஸ்கேப் ஆய்டும். கார்ல காதல் பாட்டுகள் போட்டுட்டா சேர்ந்து கூடவே பாடிக்கிட்டு சுத்திச் சுத்தி பறந்து வரும். ‘கண்கள் இரண்டால்’ பாட்டு போட்டா டபுள் குஷியாய்டும்.

தீபாவளிக்காக சென்னைல ஊருக்குப் போக நாங்க எல்லோரும் தயாரானப்போ அதுங்களும் தயாராய்டுச்சு. சிட்டி இரத்தமா குடிச்சு குடிச்சு போறடிச்சதால கிராமத்து சரக்கு குடிக்க ஆசை வந்துடுச்சு போல. என் கார்லயே ஓசில வந்து ஹனிமூன் கொண்டாடலாம்-னு கெளம்பிடுச்சு.

அவனவன் தீபாவளிக்கு ஊருக்குப் போறதுக்கு மூனு மாசம் முன்னாடி ரயில் டிக்கெட் ரிசர்வ் பண்ண முயற்சி செஞ்சு, முடியாம தவிக்கறான். மூனு மணிநேரம், நாலு மணி நேரம்-னு லைன்ல நின்னு பத்து நிமிஷத்துல அத்தனை டிக்கெட்டுகளும் வித்துடுச்சு-ன்னு பதர்றான். ஆம்னி பஸ்கள்ல மூனு பங்கு வெல குடுத்து டிக்கெட் வாங்கறான். இல்லன்னா இருவது கிலோ மீட்டர்கூட தொடர்ச்சியா ஓடமுடியாத ஒரு ‘சிறப்பு’ கவர்மெண்ட் பஸ்ல ஏறி மூச்சு விடக்கூட முடியாம ஒத்தக் கால்ல நின்னுகிட்டு பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்யறான். இந்த ரெண்டு கொசுக்களும் என்னோட சேர்ந்து சொகுசா ஊருக்கு வர கெளம்பிடுச்சு. விடுவேனா?

பெண் கொசுவைப் பிடிச்சேன்.(எப்டி பெண் கொசுவை அடையாளம் கண்டுபிடிச்சேன்னு கேக்காதீங்க). என் தம்பியோட கார்ல போட்டு கதவை சாத்திட்டேன். ஆண் கொசுவை மட்டும் என் கார்லயே கூட்டிக்கிட்டு ஊருக்கு கெளம்பிட்டேன்.

அன்றில் கொசுக்கள் ரெண்டுக்கும் கோவம் வந்துச்சு. ‘நீ ஊருக்குப் போய் சேரறதுக்கு ஆகற 8 மணி நேரத்துக்கு நான் யார் மேலயும், எது மேலயும் உக்காரம, உக்காரா நோன்பு இருப்பேன்’னு சபதம் போட்டுச்சு, பெண் கொசு. என் கூடவே வந்த ஆண் கொசுக்கும் பயங்கற கோவம். நானும் எங்கேயும் உக்காறாம பறந்துகிட்டேதான் இருப்பேன்னு சபதம் போட்டுச்சு.

வழில பெட்ரோல் போட காரை நிறுத்தினேன். சாப்டறதுக்காக நிறுத்தினேன். இயற்கையின் அழைப்புகளுக்காக நிறுத்தினேன். அப்பல்லாமும் கூட அசராம பறந்துகிட்டே இருந்துச்சு ஆண் கொசு.

270 கிலோமீட்டர் பயணம் செஞ்சு ஊர் போயி சேர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி, வேதாளம் விக்ரமாதித்தன கேக்கற மாதிரி சில கேள்விகள் கேட்டுச்சு. இதுக்கு பதில் சொல்லலன்னா உன் தலை சுக்குநூறா வெடிச்சுப் போகக் கடவது-ன்னு சொல்லிட்டு கேள்விகளை கேட்க ஆரம்பிச்சுது.

1. ‘நான் உன் கூடவே உன் கார்லயே வந்திருந்தாலும் உன் கார்ல ஒரு வினாடி கூட உக்காறல’. ‘நான் உக்காந்திருந்தா உன் காரோட எடை ஒரு கிராம் ஏறியிருக்கலாம். நான் உக்காறவே இல்ல, உன் காரோட எடை என்னால கூடல. அப்புறம் எப்டி நீ உன் கார்ல என்னை கூட்டிட்டு வந்ததா ஆகும்?’

2. ‘எட்டு மணி நேரத்துக்கும் அதிகமா நானும் என் கேர்ள் ஃப்ரெண்டும் பறந்துகிட்டே இருந்தாலும், நான் என் கேர்ள் ஃப்ரெண்டை விட்டு எவ்வளவோ தூரம் தள்ளி வந்துட்டேன். அவ அங்கேயே பறந்துகிட்டு இருக்கா. நான் நீ செஞ்ச சதியால இத்தனை தூரம் தள்ளி வந்துட்டேன். இந்த எட்டு மணி நேரத்துல யார் அதிக எனர்ஜிய செலவு பண்ணி சீக்கிரம் டயர்டா ஆகியிருப்பா, நானா இல்லை என் கேர்ள் ஃப்ரெண்டா?’

3. ‘நீ செஞ்ச, நீ செஞ்ச’, குரல் கொஞ்சம் விம்மியது. ‘நீ செஞ்ச இந்த அநியாயத்துனால..’ இன்னும் கொஞ்சம் விம்மல். ‘நீ செஞ்ச பாவத்துக்கு.!!.’

டப்.

‘பாருங்கங்க, நானும் பார்த்துகிட்டே இருக்கேன், இந்தக் கொசு நாம கெளம்புனதுல இருந்து இங்கேயே சுத்திச் சுத்தி வந்து இர்ரிட்டேட் பண்ணிக்கிட்டே இருக்கு!!’ என்று அவள் விகடனைக் காட்டினாள் என் மனைவி. அட்டைப் பட அழகியின் முகத்தில் இரத்தப் பொட்டுபோல் ஒட்டிக்கொண்டிருந்தது அந்த ஆண் கொசு.

சரவ் (Sarav) எழுதியது | 2 responses so far

நல்ல நேரம்.

Filed in General on Oct 21st 2008

நல்ல காரியங்கள் செய்யறதுக்கு எங்க வீட்ல எப்பவும் நல்ல நேரம் பாப்பாங்க. வெளியூர் பிரயாணம் களம்பறதுக்கு, விசா இண்டர்வியூக்கு, முதன் முதலா பள்ளிக்கூடம் சேர்றதுக்கு, எதாவது ஒரு காரியம் புதுசா ஆரம்பிக்கறதுக்குன்னு எல்லாத்துக்கும் நல்ல நேரம் பாத்து சொல்லுவாங்க. எங்க பாட்டி இன்னும் மோசம், வீட்டை விட்டு வெளில போறதுக்கே நல்ல நேரம் பாப்பாங்க. ஒம்போது பத்தரை ராவுகாலம். ஏழரை ஒம்போது எமகண்டம் இப்டி ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க.

இப்போ புதுசா ஒரு டைமிங் ஆரம்பிச்சிருக்காங்க. பிறந்தநாள் விழாவா சாயங்காலம் அஞ்சு மணில இருந்து ஏழு மணி வரைக்கும் வெச்சுக்கோ. காது குத்தும் விழாவா, காலைல 7 மணில இருந்து 9 மணிக்குள்ள வெச்சுக்கோ அப்டீன்னு. மதியம் 1 மணில இருந்து 5 மணி வரைக்கும் ஆகாது. காலைல 3 மணில இருந்து 1 மணிவரைக்கும் வேலைக்காகாது. அப்டீன்னு. இந்த நேரங்கள்ல மின்சாரம் இருக்காது. காலைல ரெண்டு மணி நேரம், சாயங்காலம் ரெண்டு மணி நேரத்துல எல்லாத்தையும் முடிச்சிடணும்.

இந்தப் பதிவை இன்னும் ஒரு நிமிடத்துக்குள்ள பதியலைன்னா 4 மணி நேரம் காத்திருக்கணும். மின்சாரத்துக்கு.

என்னக் கொடுமை சரவணன் இது-ன்னு என்னை நானே கேக்கவேண்டியிருக்கு.

நாலு மணி நேரம் கழிச்சு இன்னும் எழுதறேன்.

சரவ் (Sarav) எழுதியது | No responses yet

வயலின் வாய்ஸ்.

Filed in General on Sep 9th 2008

ஒவ்வொரு பிரபல பாடகர்களுக்கும் ஒரு தனியான குரல் இருக்கற மாதிரி இவரோட வயலின் இசைக்கும் ஒரு தனி குரல்/ஓசை இருக்கும். குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களோட வயலின் இசைக்கு. எங்கே கேட்டாலும் தனியா தெரியும். வயலின்ல பல விந்தைகள் செய்வாரு. எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடல்கள்ல பல பாடல்கள் எனக்கு முதல்ல இவர் வயலின் மூலமாதான் அறிமுகம். பசு மரத்தாணிபோல இன்னும் என் நெஞ்சுல பதிஞ்சுபோன இசை. திரைப்படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. ஒரு இசைப்பள்ளி வெச்சு நடத்துகிட்டு இருந்தாரு. இசையோட மகத்துவத்தை மட்டும் பரப்பாம, அதோட மருத்துவ குணங்களையும் ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருந்தாரு.

சின்ன வயசுல எங்க ஊர் கோவில்ல பார்த்த நிகழ்ச்சில ஆரம்பிச்சு போன மாசம் வடபழநி கோவில்ல பார்த்த நிகழ்ச்சி வரைக்குமான காட்சிகள் மனசுல ஓடிட்டே இருக்கு. அவரோட திடீர் மறைவு இசைத்துறைக்கு ஒரு பேரிழப்புதான். அவரோட ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

சரவ் (Sarav) எழுதியது | No responses yet

கோல சாஸ்த்திரம்

Filed in General on Sep 3rd 2008

இன்னிக்கு தம்பி வீட்டுக்கு வந்திருந்தேன். அவங்க வீட்ல இருந்த மாதாந்திர நாட்குறிப்பை பாத்துகிட்டு இருந்தேன். கோயம்புத்தூர் பீளமேட்ல இருக்குற ஒரு சூப்பர் காஸ்ட்டிங் கம்பெனில இருந்து யாருக்கோ கொடுக்கப்பட்டு அது பல கைகளுக்கு அன்பளிப்பா போயி கடைசியா என் தம்பிட்ட வந்திருக்கணும். “மெஷின் மோல்டு சீ.ஐ ரஃப் காஸ்ட்டிங் கம்பெனிக்கும்” தினசரி வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்-னு எனக்கு தெரியல.
அந்தக் காலண்டர்ல கண்ணைக் கவர்ந்த விஷயம் ஆகஸ்ட் 15-ம் நாள், சுதந்திர தினம், ஒரு முகூர்த்த நாள்-ன்னு போட்டிருந்தது. ஆகஸ்ட் 15 அன்னிக்கு கல்யாணம் பண்ணிக்கற எத்தனை பேருக்கு அது ஒரு சுதந்திரம் கிடைக்கற நாளா இருக்கும். எத்தனை பேருக்கு சுதந்திரம் பறிபோற நாளா இருக்கும்-னெல்லாம் யோசிச்சுகிட்டு இருந்தேன்.

ஒரு ஜோக் கேள்விப்பட்டிருப்பீங்க. ஜன்னல் ஓரமா நின்னு எதையோ தீவிரமா யோசிச்சுகிட்டு இருந்த கணவன்கிட்ட மனைவி, ‘என்ன பலமான யோசனை?’-ன்னு கேக்கறா. அதுக்கு அவன், ‘20 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்லதான் உங்க அப்பா என்கிட்ட, ‘என் மகளைக் கல்யாணம் பண்ணிக்கிறியா இல்ல எதாவது ஒரு கேஸப் போட்டு 20 வருஷம் உள்ளத் தள்ளிடவா’-ன்னு கேட்டாரு. அன்னைக்கு சரியாம முடிவை எடுத்திருந்தேன்னா, இன்னிக்கு எனக்கு விடுதலை கிடைச்சிருக்கும்!!’-ன்னு சொல்ற மாதிரி இருக்கும் அந்த ஜோக்.

கணவன் மனைவி சுதந்திரத்தப் பத்தி யோசிக்கறத விட்டுட்டு காலண்டரை இன்னும் ஆராய்ஞ்சப்போ, கோல சாஸ்த்திரம்-ன்னு போட்டு என்னவோ அச்சிட்டுருந்தாங்க. எதாவது பூகோல சாஸ்த்திரமா-ன்னு உத்துப் பார்த்தப்போ வீட்டு வாசல்கள்ல போடற கோலத்துக்கான சாஸ்திரம். ‘இந்த ஜெனரேஷன் மக்களுக்கு கோலம்-ன்னா என்ன-ன்னு தெரியறதே கஷ்டம். இதுல அதுக்கு சாஸ்த்திரம் வேறயா’-ன்னு நெனைச்சுகிட்டு படிச்சேன்.

“சூரியன் உதிப்பதற்கு முன் வாசல் பெருக்க வேண்டும். சானம் இல்லாமல் வெறும் தண்ணீர் வைத்து பெருக்கக்கூடாது. அன்று எடுத்த புதிய தண்ணீராக இருக்க வேண்டும். ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும். போடுகிற கோடு தெற்குப் பக்கமாக முடியக்கூடாது. கோலம் அழகாகவும் கவர்ச்சியாகவும் அமைவது நல்ல சகுணமாகும். வீட்டை நெருங்க மூதேவி அஞ்சுவாள். இரட்டை இழை கோலங்கள்தான் போடவேண்டும். அசுபக் காரியங்களுக்குத்தான் ஒன்று அல்லது மூன்று இழைக் கோலங்கள் போடலாம். அரிசி மாவில் தான் கோலம் போட வேண்டும். அதை வந்து தின்னும் காக்கை மற்றும் எறும்புகள் முதலியன நமக்கு அரிசி நன்றாக விளைய வேண்டும் என ஆண்டவனிடம் சிபாரிசு செய்யும் என்பது ஐதீகம். வேலை ஆட்களைக்கொண்டு கோலம் போடக்கூடாது. தவச நாட்களில் கோலம் போடக்கூடாது. அன்று மாலையில் கோலம் போடலாம்.”

அடுத்தத் தலைமுறை ஆளுங்ககிட்ட இதைச் சொன்னா என்ன ஆகும். என்னென்ன கேள்விகள் கேப்பாங்க?
சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடி-ன்னா, You mean mid night?.
சானம் எந்தக் கடைல கெடைக்கும்?
ஆமா, Which side is South?
வீட்ல சமயல்-ல இருந்து துணி துவைக்கறது வரைக்கும் வேலையாள் செய்றாங்க. Why not this Kolam thing?
தவச நாள் ஒரு மாசத்துக்கு எத்தனை தடவை வரும்? Twice a month??
இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ!! அவங்களுக்கு பதில் சொல்றதுக்குள்ள ‘வேண்டாம்பா, கோல சாஸ்த்திரம் ஒன்னு இல்லை. அதைப் பத்தி நான் உன் கிட்ட சொல்லவும் இல்ல’-ன்னு எஸ்கேப் ஆக வேண்டியிருக்கும்!!

எனக்கு தெரிஞ்சு வீட்டு வாசல்ல கோலம் போடறவங்க ரொம்ப கம்மிதான். கைவிட்டு எண்ணிடலாம்!!
Anyway!! ஆபீஸ்க்கு லேட்டாய்டுச்சு. மீண்டும் சந்திப்போம்!!

சரவ் (Sarav) எழுதியது | One response so far

தமிழனின் பெருமை.

Filed in General on Aug 22nd 2008

‘ஒன்னு தெரியுமா உங்களுக்கு, ஜப்பான்காரன் வேலை செய்யலன்னா செத்துப்போய்டுவான், சீனா காரன் சூதாடலன்னா செத்துப்போய்டுவான், இங்லீஷ்காரன் தன்ன பெருமையா நெனைக்கலன்னா செத்துப்போய்டுவான், இந்தியாகாரன்… பேசலன்னா செத்துப்போய்டுவான்’!!-ன்னு பாட்சா-ல சூப்பர் ஸ்டார் ரஜினி பேசற எழுத்துச் சித்தர் பாலகுமாரன் எழுதின வசனம் வரும். இந்தியர்களோட பேச்சு அவ்ளோ பிரபலம்-னு சொல்லியிருப்பாரு.

இங்க ஒருத்தரு பேசியே கின்னஸ் சாதனை பண்ணப்போறாரு. ‘Big தினா’, தமிழ் பேசும் இந்தியர், Big 92.7 Fm சென்னை வானொலில ‘ரேடியோ ஜாக்கி’யா இருக்காரு. போன வருஷம் 92.7 மணி நேரம் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சாதனை பண்ணினாரு. இந்த வருஷம் 150 மணி நேரம் தொடர்ந்து தொகுத்து வழங்கி கின்னஸ் புத்தகத்துல இடம் பெறற முயற்சில இறங்கியிருக்காரு. இதுக்கு முன்னாடி யாரோ ஒரு அயல்நாட்டு அம்மணி 136 மணி நேரம் தொடர்ந்து தொகுத்து வழங்கி பண்ணின சாதனைய இவரு முறியடிக்கப்போறாரு. கிட்டத்தட்ட ஒரு வாரம், தொடர்ச்சியா, தூங்கவே தூங்காம நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி சாதிக்கப்போறாரு.
வாழ்த்துக்கள் தினா.
இவர் தொகுத்து வழங்கறதை நேரடியா நீங்களும் பார்க்கலாம்.

அவருக்கு வாழ்த்து சொல்ல ஒரு நடிகர் தொலைபேசில அழைச்சிருந்தாரு. ரேடியோல ஒலிபரப்பான அதுல, அவர் சொல்லியிருந்தாரு, ‘தினா நீங்க நிச்சயமா வெற்றியடைவீங்க, ஏன்னா நீங்க தமிழர். வெற்றின்னா தமிழ், தமிழ்ன்னா வெற்றி. தமிழ் தோக்காது. நிச்சயமா வெல்லும்-ன்னு உணர்ச்சி பொங்க பேசிட்டு. ‘விஷ் யூ ஆல் த பெஸ்ட் தினா’-ன்னு வாழ்த்துக்களை மட்டும் ஆங்கிலத்துல சொல்லிட்டு வெச்சிட்டாரு!! :)

சரவ் (Sarav) எழுதியது | 2 responses so far

நம்பிக்கையில்லாத் தீர்மானம்.

Filed in General on Jul 22nd 2008

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைஞ்சுடுச்சு. காங்கிரஸ் 275 வாக்குகள் ‘வாங்கி’ (:))வெற்றியடைஞ்சிருக்காங்க.
அரசுக்கு எதிரான வாக்குகள் 256.
நம்ம நாட்டுக்கு மின்சார உற்பத்தி ஒரு பெரிய தேவை. இன்னும் வரப்போற வருடங்கள்ல மின்சாரத்தோட தேவை இன்னும் பல மடங்கு அதிகமாகப்போகுது. அணு மின் உற்பத்திங்கறது ரொம்ப அவசியமான ஒன்னுதான். அதுக்காக அமெரிக்காவோட ஒப்பந்தம் வெச்சுக்கறது தேவைதான்னுதான் எனக்கும் படுது.
மக்களவைல நடந்த விவாதத்தை டிடில நேரடி ஒலிபரப்பு செஞ்சாங்க. ப.சிதம்பரம் பொருமையா விளக்கம் கொடுத்துகிட்டு இருந்தாரு. சீனா மாதிரி நாடுகள்ல அணு மின் நிலையங்களுக்கு காட்டற ஊக்கம் ரொம்ப அதிகம்னு விவரிச்சு சொல்லிட்டு இருந்தாரு.
மதியத்துக்கு மேல ஒலிபரப்பு நிறுத்திட்டாங்க. காங்கிரஸ் வெற்றியடைஞ்சதுல எனக்கு சந்தோஷம்தான்.

எதிர்காலத்துல பயன்கள்னு நான் யோசிக்கற சில விஷயங்கள்.
மின் உற்பத்தி இன்னும் பல மடங்கு அதிகமானா, முக்கியமா பெட்ரோல் மேல இருக்குற டிப்பெண்டன்ஸி கொறையும். மின்சாரத்துல இயங்கற அதிவேக ரயில்கள் வந்துச்சுன்னா பெட்ரோல் பறவையான விமானத்தை நம்பியிருக்க வேண்டாம். மின்சாரத்துல இயங்கற ஸ்கூட்டர்கள் இப்போவே கொஞ்சம் வர ஆரம்பிச்சிருக்கு. பெட்ரோல் விலை இன்னும் அதிகமாகும்போது மக்களோட பார்வை அதுபக்கம் திரும்பும். மாஸ் ப்ரொடக்ஷன் பண்ணும்போது அதோட விலை இன்னும் இறங்கி வரும். மாநகரப் பேருந்துகள் பேட்டரி பஸ்களா மாறலாம். பெட்ரோல் ஊர்திகள் கொறைஞ்சா பொல்யூஷன் எவ்ளோ கொறையும்-னு சொல்லவே வேண்டாம். அவ்ளோ ஏன், பத்து வருஷம் கழிஞ்சு இந்தியா வந்தீங்கன்னா, விமான நிலையத்துல எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் உங்களை வரவேற்கலாம்!! இது எல்லாமே போக்குவரத்துத் துறைல மட்டும். விவசாயம் உட்பட இன்னும் எல்லாத் துறைகள்லயும் வரப்போற நெறைய முன்னேற்றங்களுக்கு இது ஒரு முதல் படியா இருக்கும்-னு தோனுது.

சரவ் (Sarav) எழுதியது | 4 responses so far

கிருஷ்ணாவின் மனைவி.

Filed in General, சிறுகதை முயற்சிகள் on Jun 3rd 2008

கிருஷ்ணாவின் மனைவி, இனிமே ‘கிம’-ன்னு சுறுக்கமா அழைக்கப்படப்போற இவங்க நல்லா தமிழ் பேசுவாங்க. பெப்ஸி உமா மாதிரி அழகான கனீர் குரல். அமேரிக்கால, நியூ யார்க் நகரத்துல வேலை செய்யறாங்க. ‘கிம’ வேலை பாக்கற அலுவலகத்துல அவங்கள ரொம்ப வேலை வாங்கறாங்க. காலைல 9.30 மணிக்கு அலுவலகத்துக்குள்ள போனா, மதியம் சாப்பாட்டு இடைவேளையைத் தவிர, மாலை 5.30 மணி வரைக்கும் வேலை வேலை வேலைதான். வேலை முடிச்சுட்டு வீட்டுக்குப் போனதுக்குப்போனதுக்கு அப்புறமும் அலுவலக வேலைக்காக ‘லாகான்’ பண்ணி சில மணி நேரங்கள் வேலை பார்ப்பாங்க. வழக்கமா 8 மணி நேரம் தூங்கும் ‘கிம’ இப்போல்லாம் அவ்வளவு நேரம் தூங்க முடியறது இல்லை. ரொம்ப நாளைக்கு அப்புறம் நேத்துதான் 7 மணி நேரம் தூங்க முடிஞ்சுது. 8 மணி நேரம் நிம்மதியா தூங்கலன்னா ‘கிம’ க்கு மற்ற வேலைகள் ஒழுங்காவே ஓடாது. ஆனா ‘கி’-க்கு அப்படியில்லை. அவர் நாலு மணி நேரம் அஞ்சு மணி நேரம் தூங்கினாலும் அடுத்த நாள் வேலைக்கு சீக்கிரமா போக முடியுது. ‘கிம’க்கு அது ரொம்ப கஷ்டமா இருக்கு.

‘கிம’ அடுத்த வாரம் இந்தியாவுக்கு போறாங்க. விடுமுறைக்கு. மூனு வாரம். நிம்மதியா ஒரு வேலையும் செய்யாம ரெஸ்ட் எடுத்துட்டு வரணும். திரும்ப வரும்போது அவங்க கம்ப்யூட்டரோட பாஸ்வேர்ட்கூட அவங்களுக்கு ஞாபகம் இல்லாத அளவுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும். ரெண்டு வாரம்தான் அலுவலகத்துல விடுமுறை நாட்கள். ஒரு வாரம் ‘காம்ப் ஆஃப்’. இப்போ கடுமையா வேலை செய்யறதுனால அவங்க மேனேஜர்கிட்ட பேசி ‘காம்ப் ஆஃப்’க்கு பர்மிஷன் வாங்கிட்டாங்க. (’காம்ப் ஆஃப்’-ன்னா என்னன்னு தெரியலையா, சம்பளத்தோட விடுமுறை. வீட்ல இருந்து அதிக நேரம் வேலை பார்த்ததுனால, மேனேஜர் மகிழ்ந்து சம்பளத்தோட ஒரு வாரம் விடுமுறை கொடுத்திருக்காரு). திரும்ப வந்து எப்டியும் ஒரு வாரமாவது ‘ஜெட் லேக்’, அது இது-ன்னு ஓ பீ அடிச்சுக்கலாம். மொத்தத்துல ஒரு நாலு வாரம் ஃப்ரீயா இருக்கணும்.

இந்தியா வரப்போறதா சொன்னொன்ன, ‘கி’வோட அக்கா ஒரு லிஸ்ட் கொடுத்துட்டாங்க. ஷாப்பிங் பண்றதுக்கு. இந்தியால உபயோகப்படுத்தற மாதிரி மொபைல் போன், ப்ளூ டூத் ஹெட் செட், ட்டாய்ஸ், சாக்லேட் இன்னும் நெறைய. இதையெல்லாம் ‘கிம’ வாங்கப்போறது இல்லை. இந்தியாலயே நல்ல மொபைல் ஃபோன்கள் கெடைக்குது. எதுக்கு இங்கேயிருந்து வாங்கிகிட்டு போகணும்? ‘கி’வுக்கும் வாங்கிட்டுப் போறதுல இஷ்டம் இல்லை. சும்மா சாக்லேட் மட்டும்தான் வாங்கிட்டு போறாங்க.

ஆமா, ‘கிம’ பத்தி இவ்ளோ தூரம் சொல்றியே, அவங்களோட பேரென்ன, உனக்கும் அவங்களுக்கும் என்ன உறவு-ன்னு கேக்கறீங்க?

அலுவலகத்துக்கு போகும்போது ரயில்ல நான் உக்காந்திருந்த இருக்கைக்கு நாலு இருக்கைகள் பின்னாடி நின்னுகிட்டு அவங்களோட நண்பர்கிட்ட பேசிகிட்டு இருந்தவங்கதான் இந்த ‘கிம’. ரயில்ல யாரோ அவங்க நண்பர்கிட்ட பேசிகிட்டு வர்ற ஒருத்தர்கிட்ட, அவங்களோட பேர, நான் எப்டி கேக்க முடியும்? அது அவ்ளோ நாகரீகமா இருக்காதுல்ல??!!

சரவ் (Sarav) எழுதியது | 4 responses so far

I miss this guy Sujatha!! :(

Filed in General on May 19th 2008

சுஜாதா சாரோட இன்னோரு கதை. கர்ஃப்யூ.
சதாரணமானத் தொடக்கம்.
சாதாரண உரையாடல்களில் கொஞ்சம் சீரியஸான மேட்டர்.
உணர்வுப்பூர்வமான திருப்பம்.
அழுத்தமான முடிவு.
அப்புறம் நக்கலான முடிவு.

நக்கலான முடிவைப் படித்ததும் தனிமையிலும் கொஞ்சம் சிரிப்பு.
சிரித்து முடிப்பதற்குள் அவருக்காக ஒரு துளி கண்ணீர்.
I miss this guy, Sujatha. :’(

சரவ் (Sarav) எழுதியது | One response so far

செந்தில்கள். (Updated)

Filed in General, சிறுகதை முயற்சிகள் on May 10th 2008

பள்ளிக்கூட நாட்கள்ல இருந்தே இந்த செந்தில்கள் என்னை விட்டதே இல்லை. செந்தில், செந்தில் குமார், செந்தில் குமரன், செந்தில் வேலன் இப்டி பல பெயர்கள்ல கூடவேதான் வந்துகிட்டு இருக்காங்க. சில நேரம், ஒரே வகுப்புலயே ரெண்டு செந்தில் குமார்களும் இருந்திருக்காங்க. அதுவும் ஒரே இனிஷியலோட. பல்லு எடுப்பா இருக்கற ஒருத்தனை ‘பல்லு செந்தில்’ன்னும் சந்தனப் பொட்டு வெச்சிருக்கற செந்திலை ‘சந்தனப் பொட்டு செந்தில்’ன்னும் அடையாளம் வெச்சுக்க வேண்டியிருக்கும். சில செந்தில்கள் ரொம்ப நல்லா படிச்சு எனக்கு வேட்டு வைப்பாங்க. ‘பக்கத்துல உக்காந்திருக்குற செந்திலைப் பாருடா? அவன்லாம் நல்லாப் படிக்கல? ஏன் நீ மட்டும் என் உயிரை வாங்கற? அவன் ****** வாங்கிக் குடிடா!! அப்பவாவது உனக்கெல்லாம் புத்தி வருதான்னு பார்ப்போம்’ன்னு எட்டாம் வகுப்பு வரலாறு வாத்தியார் என்னைக் கேவளப்படுத்த காரணமா இருந்திருக்கான் ஒரு செந்தில். ‘அவன் கையெழுத்தைப் பாரு. முத்து முத்தா இல்லை. நீ மட்டும் ஏன் கோழி கிறுக்கறமாதிரி எழுதற?’-ன்னு மூனாம் வகுப்புலயே மணிக்கட்டு உடைய அடி வாங்கிக் கொடுத்திருக்கான் இன்னொரு செந்தில். இதுவாவது பரவாயில்லை.
‘செந்தில் கூட நீ சேரவே கூடாது!!’ இது எங்க மாமா.
‘எந்த செந்தில்?’ வேற எங்கேயோ பார்த்துகிட்டு.
‘அதான் உன் கூட கிரிக்கெட் வெளையாட வர்றானே அவன்!!’
‘கிரிக்கெட் வெளையாடாவா? யாரு??’ பாவமான முகம்.
‘தெரியாத மாதிரி நடிக்காத. அந்த ‘டீக்கடை செந்தில்’. அவன் ஆளும் மொகறையும்’
யார் யார்கூட ஃப்ரெண்டா இருக்கணுங்கறதையெல்லாம் நீங்க சொல்லக்கூடாது-ன்னு மனசுல ஓடினாலும்,
‘அவன் கூட ஏன் சேரக்கூடாது?’ (செட்டியார் கடைல அவன் ஒளிஞ்சு நின்னு சிகரெட் பிடிச்சதை மாமா பாத்துட்டாரு-ன்னு ஏற்கனவே எனக்குத் தெரியும்)
‘ஏன்னு எதிர்த்தாக்கேக்கற? மாமா சொன்னா சரின்னு கேட்டுக்கமாட்ட??!!’ உயர்ந்த குரலில் அம்மா.
‘இல்லம்மா, ஏன்ன்னு..’
‘அவன் கூட சேராம இருந்தா என்னை மாமா-ன்னு கூப்டு. இல்லை அப்டி கூப்டறதை நிறுத்திடு’
இப்படி எங்க மாமா, அம்மாக்குப் பிடிக்காத செந்தில்கள் இருந்திருக்காங்க.

பண்ணிரண்டாவது முடிச்சுட்டு இன்ஜினியரிங் போகும்போது, ‘முருகா, ஆண்டவா, இந்த ‘சேந்தில்கள்’ட்ட இருந்து ஒரு விடுதலை வாங்கிக்கொடுப்பா’ன்னு வேண்டிகிட்டுப் போனாலும், ‘ஹாய், கவுன்ஸ்ஸிலிங்க உனக்கும் இந்தக் காலேஜ்தான் கெடைச்சுதா?’-ன்னு கூடவே வந்து ஒட்டிக்கிட்டான் பண்ணண்டாம் வகுப்பு செந்தில். ‘வேட்டு வெச்சுட்டியே முருகா’-ன்னு நெனைச்சுகிட்டு இருந்தப்பவே ‘நீ எந்த செக்ஷன்? நான் C’ என்றான். ‘நான் B’, அப்பாடா வேற சேக்ஷனுக்காவது போய் தொலைஞ்சியே-ன்னு நெனைச்சுகிட்டு முதல் நாள் வகுப்புல போய் உக்கார்ந்தேன். ‘முதல் பெஞ்ச்சுல இருந்து ஆரம்பிச்சு ஒவ்வொருத்தரா அவங்க பேரைச் சொல்லி அறிமுகம் செஞ்சுக்கங்க’-ன்னு முதல் வகுப்பை தொடக்கி வெச்ச லெக்சரர் சொல்லும்போது ஒரு த்ரில்லிங் ஆரம்பிச்சுது. முதல் வரிசைல முதல் டெஸ்க்ல செந்தில் இல்லை, இரண்டாவது டெஸ்க்ல நோ செந்தில், மூனாவது டெஸ்க்ல செந்தில் நஹி-ன்னு நீண்டுக்கிட்டே வந்த சந்தோஷத்தை மூனாவது வரிசைல மொதல் டெஸ்க்ல ஒரு செந்தில் வெரட்டியடிச்சுட்டான்.
‘குட்மார்னிங், ஐ ஆம் செந்தில் குமரன் ஃப்ரம் தேனி’.

இப்டி வழி நெடூக பல செந்தில்களோட சேர்ந்து பயணம் செஞ்சிருந்தாலும் இவங்களுக்குள்ள பொதுவான விஷயம் அதிகம் இருந்ததில்லை. ஒருத்தன் சாந்து பொட்டு நிறம், இன்னொருத்தன் சந்தனப் பொட்டு நிறம், மற்றொருத்தன் மை பொட்டு நிறம். எடுப்பான பல்லு, இந்திராகாந்தி மூக்கு, சப்பை மூக்கு மேலையும் எப்பவும் கோபம், கப்பைக் காலு, நெட்டைக் கொக்கு இப்டி ஒவ்வொரு செந்திலும் ஒவ்வொரு மாதிரி.

ஆனா, நான் இப்போ சொல்லப்போற சில செந்தில்களுக்குள்ள ஒரு பொதுவான விஷயம் இருக்கு.

முதல் செந்தில்: மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்கணும்-னு ரொம்ப ஆவலா என்ஜினியரிங் கல்லூரில சேர்ந்தவன். அவன் விரும்பிய மெக்கானிக்கல் என்ஜினியரிங் கெடைச்சதுல அவனுக்கு பரம சந்தோஷம். கல்லூரி நாட்கள்ல அவனை சந்திச்ச சந்திப்புகள்ல, அவனோட ஒவ்வொரு பார்வையிலயும் அந்த சந்தோஷம் தெரியும். ஆரம்ப நாட்கள்லல்லாம் கியர் வீல் பத்தியும் சிம்பிள் மெஷின்ஸ் பத்தியுமே மணிக்கணக்குல பேசுவான். ‘யூ நோ, இன் தெர்மோடைனமிக்ஸ்..’-ன்னு ஆரம்பிச்சான்னா, ‘சாமி ஆளை விட்டுடுடா’ன்னு ஓட்டம் எடுத்துடுவேன். ‘யூ நோ, கார்லல்லாம் கார் ஓடும்போதுதான் AC போடணும். நிக்கும்போது போட்டா AC சீக்கிரமே கெட்டுப்போய்டும்’-ன்னு சொல்லுவான். ஏண்டா-ன்னா? கூலிங் சிஸ்டம், கப்ரஸர் சிஸ்டம் பத்தியெல்லாம் அரை மணி நேரம் விளக்கம் சொல்லிட்டு, ‘புரிஞ்சுதா’-ம்பான். ‘ஓ.. ஷ்யூர்’-னு சொல்லிட்டு எஸ்கேப் ஆய்டுவேன். அவன் காலேஸ் ஃபர்ஸ்ட், யூனிவர்சிட்டி செகெண்ட்-ன்னு மெடெல்லாம் வாங்கினான். மேல் படிப்புக்காக, ஐ ஐ டி-யில் தேர்வாகி, ஏர் கண்டிஷனிங் & ரெஃப்ரிஜ்ரேஷன்-லயே மாஸ்டர்ஸ் டிகிரி முடிச்சான். காம்பஸ் இண்ட்டர்வியூலயே தேர்வாகி வேலையில் அமர்ந்தான்.

இரண்டாவது செந்தில்: இவன் எலெக்ட்ரிக்கல்ஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங். வாயைத் திறந்தா மூடாத டைட். எப்பவும் எதையாவது யோசிச்சுக்கிட்டே இருப்பான். திடீர் திடீர்ன்னு எதையாவது கேட்பான். அந்தக் கேள்வி நமக்குப் புரியறதுக்குள்ள இன்னொரு விஷயத்தைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சுடுவான். ஏதாவது ஒரு ஜோக் சொன்னா எல்லோரும் சிரிச்சு முடிச்சப்புறம் பத்து நிமிஷம் கழிச்சு சிரிச்சுட்டு, ‘தட் வாஸ் அ குட் ஜோக்’ அப்டீம்பான். நடந்து போய்ட்டு இருக்கும்போது ‘ஒரு சூப்பர் ஃபிகர் போகுது பாருடா!!’-ன்னு சொன்னா, அந்தப் பொண்ணு அந்தத் தெருவைத் தாண்டிப் போனதுக்கு அப்புறம், ‘எந்த ஃபிகர்?’ம்பான். திடீர்னு ஒரு நாள் தாமஸ் ஆல்வா எடிசனைத் திட்டுவான். ‘அந்த ஆள் பண்ணின தப்புடா குண்டு பல்பைக் கண்டுபிடிச்சது’-ம்பான். ‘குண்டு பல்ப் இருக்கே, அது வெளிச்சத்தையே உண்டாக்கலை. இட் ப்ரொடியூஸஸ் ஒன்லீ ஹீட். சூட்ல இருந்து கெடைக்கற சைடு ப்ராடக்ட்தான் வெளிச்சம். அந்த ஆள் கண்டுபிடிச்சதால இப்போ உலகமே சூடாயிப் போய் கெடக்குது.’-ன்னு க்ளோபல் வார்மிங்க்கு எடிசன் ஒரு முக்கியமான காரணம்-ன்னு சொல்லுவான். ‘உலகம் பூராவும் ‘எல் ஈ டி’(LED) லைட்டுகளுக்கு மாறணும். அதுதான் ரொம்பக் கம்மியா சூட்டை உண்டாக்குது’ன்னு சொல்லுவான். சூரிய சக்தி, ‘எல் ஈ டி’, ‘ஓ எல் ஈ டி’, ஃபைபர் ஆப்டிக்ஸ், இதெல்லாம்தாண்டா எதிர்காலத்துல உலகையே ஆளப்போகுது சொல்லிகிட்டே இருப்பான். ‘ஒரு நிமிஷம் முழுக்க வாயை மூடிக்கிட்டு இருக்கணும்’-ன்னு நூறு ரூபாய் பந்தயம் வைத்து பல முறை தோத்திருக்கான்.

மூனாவது செந்தில்: ரெண்டாவது செந்திலுக்கு அப்டியே தலைகீழ் இவன். அவன் லைட் எமிட்டிங் டையோடு பத்தி பேசினா, இவன் எப்பவும் ‘மண்டையோடு’ பத்திதான் பேசுவான். ‘வாழ்க்கைல எல்லாமே ஒரு பிடி சாம்பல்தான்’-ன்னு சொல்லிட்டு ஒரு காதுல ஆரம்பிச்சு மறு காது வரைக்கும் நெத்தி வழியா ரோடு போட்ட மாதிரி திருநீரு பூசிப்பான். ‘வாழ்க்கைல பணத்தையும், மனத்தையும் மட்டுமே தேடித் தேடி எல்லாருமே அலையாதீங்க. ஆத்ம ஞானத்தைத் தேடுங்க. உங்க எல்லோருக்குள்ளேயும் ஒரு சக்தி தூங்கிக்கிட்டு இருக்கு. உங்களுக்கு அது தெரியல. அந்த சக்தி பேரு குண்டலினி. அந்த சக்தியை எழுப்பினா ஆத்ம ஞானத்தை அடையற வழி உங்களுக்குத் தெரியும். அந்த ஞானத்தைப் பெற முதல் படி, ‘ஓம்’-ங்கற மந்திரம். மனிதனோட ஆதார ஸ்வரமே அதுதான். தினமும் ஓங்காரத்தை உச்சரிச்சீங்கன்னா ஞானப் பாதைல நடக்க ஆரம்பிக்கலாம். இந்த ‘ஓம்’ இந்து மதத்துல மட்டும் இல்ல. கிருஸ்துவ மதத்துலயும் இருக்கு. இந்த ‘ஓம்’தான் அங்க போயி, ‘ஓமென்’-னு ஆகி, அதுவே இப்போ ஆமென் ஆய்டுச்சு. அதே மாதிரி இஸ்லாம்ல, ‘ஓமின்’-னு ஆகி, அதுவே மறுவி, இப்போ ‘அமீன்’ ஆயிருக்கு. இதையெல்லாம் விட்டுட்டு, கல்லூரி, படிப்பு, வேலை, காதல், கல்யாணம், குழந்தை-ன்னு வேற ஏதோதோ பாதைகள்ல நீங்க எல்லோரும் ஓடிகிட்டு இருக்கீங்க. அதையெல்லாம் விட்டுட்டு என் கூட ஆன்மீகப் பாதைக்கு வாங்க’. இதையே வெவ்வேறு நேரங்கள்ல வெவ்வேற மாதிரி சொல்லுவான். சில நேரம் தூக்கம் வராத நண்பர்களும், ‘ஊறுகாய்’ கிடைக்காத குடிமகன்களும் அவனை தூண்டி விட்டு, ‘கோயில்லல்லாம் ஏன்டா ஆபாசமான சிலைகள்லாம் வெச்சிருக்காங்க?’, ‘முருகனே வள்ளியை லவ் மேரேஜ் பண்ணியிருக்காரு. அதுவும் ரெண்டாம்தாரமா!! நாம ஏண்டா காதலிக்கக்கூடாது?’ மாதிரி கேள்விகளையெல்லாம் கேட்டு அவனோட சூடான பதில்கள்ல குளிர்காய்வாங்க.

சரி, இவங்களுக்குள்ள பொதுவான விஷயம் என்ன?
பொதுவான விஷயம் என்னன்னா, மூனு பேரும் இந்தியாவோட முன்னனி ஐடி நிறுவனங்கள்ல வேலை செய்யறாங்க.

மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பை மூச்சுக் காத்தா சுவாசிச்சுக்கிட்டு இருந்த முதலாம் செந்தில் படிப்பை முடிக்கறதுக்கு முன்னாடியே காம்பஸ் இண்ட்டர்வியூல வேலை கெடைச்சு, முன்னனி ஐடி நிறுவனத்துல சேர்ந்தான். சேர்ந்து ஒரு வருஷம் வரைக்கும் சம்பளம் வந்துதே தவிர எதுக்கு சம்பளம் தர்றாங்கன்னு அவனுக்கு புரியவேயில்லை. அவன் படிச்ச படிப்பையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறக்க ஆரம்பிச்சிருந்தப்போ, ஒருநாள் திடீர்னு, ‘உங்களுக்கு டாக்குமெண்டேஷன் வருமா?’-ன்னு கேட்டாங்க. அன்னில இருந்து அவன் டாக்குமெண்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆய்ட்டான். இன்னிக்கு அவனுக்குக் கீழ பல புதிய என்ஜினியர்கள் வேலை செய்யறாங்க. சாஃப்வேர் ப்ராஜெக்ட்களுக்கு டாக்குமெண்ட் தயாரிக்கற வேலைல. CMM லெவெல் 5 சர்ட்டிஃபிகேட் வாங்கறதுக்கு என்னென்ன டாக்குமெண்ட்டுகள் தேவை-ங்கறதெல்லாம் இப்போ அவன் விரல் நுனில இருக்கு. அவன் படிச்ச அவனோட லட்சியப் படிப்பையெல்லாம் மறந்துட்டு, அவன் வேலை பார்க்கற தளத்துல AC சரியா இல்லைன்னா உடனே அட்மினுக்கு ஃபோன் போட்டு ‘AC வேலை செய்யல, ஒரு என்ஜினியரை அனுப்புங்க ப்ளீஸ்?’ என்கிறான். அவனும் ‘ஏர் கண்டிஷனிங் ரெஃப்ரிஜ்ரேஷன்’-லாம் படிச்ச என்ஜினியர்-ங்கறது அவனுக்கே மறந்து போய்டுச்சு.

‘சூரிய சக்தி, ‘எல் ஈ டி’, ‘ஓ எல் ஈ டி’, ஃபைபர் ஆப்டிக்ஸ், இதெல்லாம்தாண்டா எதிர்காலத்துல உலகையே ஆளப்போகுது’ எதிர்காலத்தின் உயிர் நாடியை தன்னோட உள்ளங்கைகள்ல உணர்ந்த இரண்டாவது செந்திலும் ஐடி நிறுவனத்துலதான் வேலைக்கு சேர்ந்தான். வேலைக்கு சேர்ந்த புதுசுல, அவன் நிறுவனத்துல ‘ரெண்டு மெயின்ஃப்ரேம் ப்ராஜெக்ட் வருது’, ‘மெயின்ஃப்ரேம் படிங்களேன்’ என்றார்கள். அவனும் படித்தான், ஆறு மாதங்கள் காத்திருந்தபின் ‘பவர் பில்டர்’ படிக்கச் சொன்னார்கள். படித்தான். சில மாதங்களுக்குப் பிறகு வீ பீ படித்தான். அப்படியே காம் ப்ளஸ் படித்தான், அப்புறம் ஜாவா படித்தான், பின்னர் ஜெயெஸ்பி படித்தான். இப்பொழுது டாட் நெட் 1.1 படித்துக்கொண்டிருக்கிறான். டாட் நெட் 5.0 ரிலீஸாகியிருப்பது அவனுக்கு இன்னும் தெரியாது. எதிர்காலத்தைப் பற்றிய அவனோட சிந்தனைகள் கனவுகள்லாம் அவனோட நிறுவனத்துக்குத் தேவைப்படாததால அதெல்லாம் இப்போ நீரூற்றப்படாத செடிகளா வாடிப்போயிருக்கு.

ஆன்மீகப் பாதையைப் பற்றி அதிகம் சிந்திச்சுக்கிட்டு, மத்தவங்களுக்கெல்லாம் அறிவுரை செஞ்சுகிட்டு இருந்த மூன்றாவது செந்தில் இப்பவும் நிறைய பேருக்கு அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருக்கிறான். ‘வாழ்க்கைல முன்னேறனும்னா, டெக்னாலஜி மட்டும் கத்துக்கிட்டாப் போதாது. டொமைன் நாளேஜ்ஜும் வேணும். மொதல்ல அதை கத்துக்க பாருங்க. டெக்னாலஜி இன்னிக்கு வரும், நாளைக்கு மாறிடும். ஆனா டொமைன் நாளெஜ் அதுமாதிரி இல்லை. எப்பவுமே ஒன்னுதான். டெக்னாலஜி பலப்பல அவதாரங்கள் எடுக்கும். ஆனா டொமைன் நாளேஜ் எங்கே போனாலும் ஒன்னுதான். மாறிக்கிட்டே இருக்குற டெக்னாலஜிய கத்துக்கறதுல உங்க டைம வேஸ்ட் பண்ணாம டொமைன் நாளேஜ்ஜ கத்துக்கறதுல செலவழிங்க’.
‘என்னடா இன்னிக்கு ப்ரதோஷமாச்சே! கோவிலுக்குப் போகல?’-ன்னு கேட்டா, ‘ஓ இன்னிக்குப் ப்ரதோஷமா?, அதையெல்லாம் மறந்து ரொம்ப வருஷம் ஆகுதுடா. கோவிலுக்குப் போறதுக்கெல்லாம் ஏதுடா டைம். ஆபீஸ்க்கு வந்துட்டுப் போறதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது’ அப்டீங்கறான்.

சரவ் (Sarav) எழுதியது | 5 responses so far

ப்ராக்டிகல்.

Filed in General, சிறுகதை முயற்சிகள் on Apr 24th 2008

1
‘ப்ராக்டிக்கலா யோசிச்சுப்பாரு கலை. கல்யாணம் பண்ணிக்காம ஒரு பொண்ணால ஒரு லெவலுக்கு மேல வாழ்க்கை நடத்தறது ரொம்பக் கஷ்டம்’ என்று ஆரம்பித்தாள் சுபா.
‘கல்யாணத்தைத் தவிர வேற ஏதும் பேச மாட்டியா? வீட்லதான் இதையே பேசி தொல்ல பண்றாங்கன்னா நீயுமா?’
கலை என்கிற கலையரசியும் சுபா என்கிற சுபஸ்ரீயும் ஒரு இந்திய நிறுவனத்திற்காக, அமெரிக்காவில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள். ஒரே நாளில் வேலையில் சேர்ந்து, ஒரே தொழில்நுட்பத்தில் வேலை செய்து, ஒரே நாளில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று, ஆறு வருடங்களைக் கடந்து, இன்றும் நியூ ஜெர்சியில் ஒரே வீட்டில் வசிப்பவர்கள். அலுவலக வேலைகளை முடித்துவிட்டு கார் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். கலை, கால்களைக் கொஞ்சம் விந்தி விந்தி நடந்துகொண்டிருந்தாள்.
‘நேத்து நைட் நீ தூங்கினதுக்கு அப்புறம், அப்பா கால் பண்ணியிருந்தாரு. உன்னை எழுப்ப வேண்டாம்-ன்னு சொல்லிட்டாரு. நல்ல வரன் ஒன்னு வந்திருக்காம். பையன் ஆஸ்திரேலியால படிச்சுட்டு இப்போ சென்னைல நல்ல வேலைல இருக்காறாம்.’
‘நான் தூங்கல. நீ பேசிட்டு இருந்தது தெரியும். கல்யாணத்தைப் பத்திதான் பேசுவாரு-ன்னு தெரியும். அதான் காலை எடுக்கல.’
‘கால எடுக்காம விட்டுட்டா ப்ரச்சனை சால்வ் ஆய்டுமா?’
‘எப்பப்பாரு சென்னைல ஒரு மாப்ள இருக்கான், பேங்களூர்ல ஒருத்தன் வேலை பார்க்கறான், கலிஃபோர்னியால குப்பை கொட்றான்னு இதையே பேசிட்டு இருந்தா வெறுப்பா இருக்காது?’
‘உன் நல்லதுக்குதானடி சொல்றாரு.’
‘இதைப் பத்தி பேசறத நிறுத்தப் போறியா இல்லையா?’
‘இல்லடி உன் கால் முடியாதது பத்திக்கூட சொல்லிட்டாராம். அவங்களுக்கும் ஆட்சேபனை இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். அதான் உன்கிட்ட சொல்லச் சொன்னாரு.’
‘ப்ளீஸ் சுபா. ஸ்டாப் இட்.’ கலையின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தன. சுபா காரை ஓட்டினாள். வீடு வரும் வரையிலும் இருவர் மனங்களிலும் எண்ணங்கள் அலை மோதினாலும், காரில் அமைதி நிலவியது.

2
மாதவன். கடந்த ஆறு மாதங்களாக தினமும் காலை 7.20 மணிக்குள் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைந்து 7.22 க்குப் புறப்படும் ரயிலில் ஏறி தாம்பரம் சானட்டோரியம் வரையில் பயணம் செய்யும் சாதாரணன். மெட்ராஸ் எக்ஸ்ப்போர்ட் ப்ராஸஸிங் ஸோனில் உள்ள ஒரு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியன். ஒல்லியான உருவமும், கருநீல நிறத்தில் பேண்ட்டும், நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட நீல நிற சட்டையும், படிய சீவிய தலைமுடியும், நெற்றியில் கொஞ்சம் குங்குமமும் காலைநேர கூட்டத்திலும் அவனைத் தனியாக அடையாளம் காட்டும். இன்று காலை 6.30 மணிக்கே ரயில் நிலையத்தை அடைந்தான். தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறாமல் ‘சேத்பட் ரிட்டர்ன் ஒன்னு’ என்று டிக்கெட் வாங்கிக்கொண்டு கடற்கரை செல்லும் ரயிலில் ஏறி சேத்துப்பட்டில் இறங்கினான்.
ரயில் ஏறக் காத்திருந்த கலையின் பின்புறமாகச் சென்று ‘ஹாய்’ என்றான்.
கொஞ்சம் திடுக்கிட்டவள் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்
‘ஹாய், என்ன இங்க?’ என்றாள். வேறு யாரும் தங்களை கவனிக்கிறார்களா என்று அவசரமாக நோட்டம் விட்டாள்.
‘இன்னிக்கு சீக்கிரமே எழுந்துட்டேன். அதான் இங்கேயே வந்துட்டேன். எக்ஸ்ட்ராவா ஒரு பத்து நிமிஷம் உன் கூட இருக்கலாம்-ல’ என்று சிரித்தான்.
‘ஏன், இன்னும் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து என் வீட்டுக்கே வர்றதுதான?’ என்று செல்லமாக கோபித்துக்கொண்டாள்.
‘அட, அதுகூட நல்ல ஐடியாதான் நாளைலேர்ந்து வந்துடறேன்’
‘அதெல்லாம் வேண்டாம், சில நேரம் என் மாமாவோ, இல்ல பக்கத்து வீட்டுக்காரங்களோ என்கூட வருவாங்க. நீ என் கூடப் பேசறதைப் பார்த்தாங்கன்னா, அடுத்த நிமிஷம் மதுரைக்கு ஃபோன் பண்ணி அப்பா-ட்ட சொல்லிருவாங்க’
‘இங்கேயே வந்துட்டேன்னு சந்தோஷப்படுவன்னு நெனைச்சேன்.’
‘சந்தோஷம்தான். ஆனா, அப்பாக்கு சேதி தெரிஞ்சுதுன்னா, படிச்ச வரைக்கும் போதும் ஊருக்கு வா-ன்னு சொல்லிடுவாரே, அப்போ என்ன பண்ணுவ?’
‘நேரா மதுரைக்கே வந்து உங்க அப்பாவைப் பார்த்து உங்க பொண்ண காலேஜுக்கு அனுப்புங்க. நான் பத்திரமா பாத்துக்கறேன்னு சொல்லுவேன்.’
‘சொல்லுவ சொல்லுவ’ என்று அதிகம் வெளியில் தெரியாமல் சிரித்துக்கொண்டாள்.
இதற்குள் ரயில் வர, இருவரும் ஏறி, அருகருகில் நின்று கொண்டார்கள். கையில் வைத்திருந்த நோட்டுப் புத்தகங்களும், தோளில் மாட்டியிருந்த லஞ்ச் பையும் இவர்களுக்கு இடையூறு செய்யாதபடி பிடித்துக்கொண்டாள். இவர்கள் இருவரும் பேசுவது இவர்களைத் தவிர வேறு யாருக்கும் கேட்காதபடி பார்த்துக்கொண்டார்கள்.
‘அப்டி என்கூட அதிக நேரம் இருக்கணும்-னு நெனைக்கறவன், சானடோரியத்துல எறங்காம, என்கூட காலேஜ் வரைக்கும் வா, இல்ல வண்டலூர் ஸ்டேஷன் வரைக்கும் வா.’
‘வரலாம்தான். என்ன, இருக்குற வேலையும் போய்டும். உங்க அப்பாட்ட வந்து பொண்ணு கேக்கறப்போ, என்ன வேலை பாக்கற-ன்னு கேட்டா எந்த வேலையும் இல்லைன்னு சொல்லணும். பரவாயில்லை-ன்னு உங்க அப்பா உன்னைக் கட்டிக்குடுப்பாரா’
‘குடுப்பாரு, குடுப்பாரு, என் தங்கச்சியையும் சேர்த்து குடுப்பாரு’ என்று புன்முருவினாள்.
‘அப்ப ரொம்ப நல்லதாப் போச்சு. இன்னிக்கே வேலையை விட்டுட’. சொல்லி முடிப்பதற்குள் தன் சுண்டு விரல் கைப்பிடியோடு சேர்த்து நசுக்கப்பட்டதால் நிறுத்திக்கொண்டான்.
சானட்டோரியம் வந்துதும், ‘என்ன வண்டலூர் வரைக்கும் வரட்டுமா? என்றான்.
‘வேண்டாம் வேண்டாம் களம்பு. நாளைக்கு சேத்பட் வராத. கோடம்பாக்கத்துல பாக்கலாம்’- என்று விடை கொடுத்தாள்.

3

இரவு தொலைபேசி அழைத்தது.
‘அப்பாவாத்தான் இருக்கும், எடுக்காத’ என்றாள் கலை.
கேட்காமல் எடுத்தாள் சுபா.
‘யாரு சுபாவா? கலை எங்கம்மா?’ என்று கேட்டாள் கலையின் அம்மா.
‘இன்னும் ஆஃபீஸ்ல இருந்து வரலம்மா. ஏதாவது முக்கியமான விஷயமா?’ என்றாள் சுபா.
‘ஆமாம்மா, அப்பாக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல. கலைகூட பேசணும்-ன்னு சொன்னாரு. அதான் கால் பண்ணேன்’
‘சரிம்மா, கலை வந்த உடனே பேசச் சொல்றேன்மா’ என்று ஃபோனை வைத்தாள் சுபா.

‘கலை, வீட்டுக்கு ஃபோன் பண்ணுடி’ என்று கெஞ்சலாகச் சொன்னாள் சுபா.
‘பேசினா திரும்பவும் கல்யாணப்பேச்சுதான் வரும்’
‘பழசையே நெனைச்சுகிட்டு இன்னும் எவ்ளோ நாள்தான் இருக்கப்போற? நீ ஊருக்குப் போயி ஆறு வருஷம் ஆகுது. இதுக்குள்ள நான் நாலு தடவை போய்ட்டு வந்துட்டேன். உன்னைப் பாக்கணும்-னு அவங்களுக்கும் ஆசை இருக்காதாடி? உன் நல்லதுக்குதான இவ்ளோ தூரம் சொல்றாங்க. நீ கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும்னுதான அவங்களும் நெனைக்கறாங்க!!’
‘எனக்கு சந்தோஷம் வேண்டாம் விட்றுங்களேன்!’
‘கஷ்டம் உனக்கு மட்டும் இல்லடி, உன்னால அவங்களும்தான் கஷ்டப்படறாங்க. நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவங்களுக்கு சந்தோஷம். உன் தங்கைக்கும் சந்தோஷம். அவளும், நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு எத்தனைநாளா காத்துகிட்டு இருக்கான்னு யோசிச்சுப் பாரு.’
மீண்டும் தொலைபேசி அழைத்தது.
கலை எடுத்து ‘ஹலோ’ என்றாள். கலையின் தங்கை பேசினாள்.
‘கலை, நான்தான் பேசறேன். பூத்லருந்து பேசறேன். அப்பாக்கு ஒன்னும் இல்லை. உடம்பு சரியில்லைன்னு சும்மா சொல்றாரு. இன்னிக்கு உன்னைப் பொண்ணு கேட்டு வந்திருந்தாங்க. பையன் ஆஸ்திரேலியால MBA படிச்சிருக்காறாம். சென்னைல வேலையாம். அவரோட தம்பியும் சென்னைலதான் வேலை பாக்கறாராம். அண்ணனுக்கு உன்னையும் தம்பிக்கு என்னையும் கேட்டு வந்தாங்க. உன்கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொல்லியனுப்பிட்டாரு. அதுனாலதான் உன்கிட்ட பேசணும்-ங்கறதுக்காக உடம்பு சரியில்லைன்னு ட்ராமா பண்றாரு. நீ பதட்டப்படாத. அப்புறமா பேசு. வெச்சிறவா?’ என்று வைத்தாள் கலையின் தங்கை.
தொலைபேச்சு விவரங்களை சுபாவிடம் சொன்னாள் கலை.
‘நல்ல வரன்டீ, ரெண்டு பேருக்கும் ஒன்னா கல்யாணத்தை முடிச்சுருவாரு உங்க அப்பா. உன் ஃபேமிலியோட சந்தோஷமே இப்போ உன்கிட்ட இருக்கு. நல்லா யோசிச்சு முடிவு பண்ணு. தயவுசெஞ்சு வீட்டுக்கு கால் பண்ணு. ’ என்றாள் சுபா.
சில மணிநேர யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள்.

4
ஏழு மணிக்கே வந்து காத்துக்கொண்டிருந்த மாதவனுக்கு ‘கடற்கரையிலிருந்து மேல்மருவத்தூர் செல்லும் ரயில் ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்துகொண்டிருக்கின்றது’ என்ற அறிவிப்பு வேம்பாகக் கசந்தது.
தாமதமாக வந்த ரயிலில் ஏறி கலையை கண்டுபிடித்து அருகில் வந்தான். அவன் நிற்பதற்கு வசதியாக இடம் ஏற்படுத்தித் தள்ளி நின்றாள், கலை.
‘நேத்து காலேஜுக்கு வரலியோ’ என்றான் மாதவன்.
‘வந்தேனே’ என்றாள் கலை கொஞ்சம் நக்கலாக.
‘7.22 ட்ரெயின்ல உன்னைப் பாக்கவே இல்லையே’
‘ஏழு மணி ட்ரெயின்லயே வந்துட்டேன்’
‘ஏழு மணி ட்ரெயின்ல வண்டலூர் போனியாக்கும்’
‘7.22 ட்ரெயின் தாம்பரம் வழியாத்தான வண்டலூர் போகும்?’
‘ஏழு மணி ட்ரெயின்ல போயி தாம்பரத்துல எறங்கி, அங்கேயிருந்து இந்த ட்ரெயின்ல போனியா?’ என்று கோபமானான் மாதவன்.
‘ஆமா’
‘ஏன், கோடம்பாக்கத்துல ஒரு கேனையன் நிப்பான், அவனைப் பாக்காம போய்டணும்-னு போனியாக்கும்’
கலை சிரித்துக்கொண்டே, ‘சரி சரி. ரொம்பக் கோவப்படாத. என் மாமா ஏதோ வேலையா தாம்பரம் வரைக்கும் போனாரு. அதுனால அவரு பைக்லயே என்னையும் கூட்டிட்டுப் போய்ட்டாரு.’
‘வேண்டாம்-னு சொல்ல வேண்டியதுதான.’
‘ஏன், எதுக்கு-ன்னெல்லாம் கேள்வி வரும். ஒரு நாள்தானன்னு போய்ட்டேன். அதுசரி உனக்கு பைக் ஓட்டத் தெரியுமா?’
கோபம் காற்றோடு கறைய ‘தெரியுமாவா, சூப்பரா ஓட்டுவேன்’ என்றான்.
‘உன் பின்னாடி உக்காந்துகிட்டு ரொம்பதூரம் பைக்ல போகணும்-னு ஆசையா இருந்துச்சு நேத்து’ என்றாள்.

5
சில மணி நேர யோசனைக்குப் பின் சுபாவை அழைத்தாள் கலை.
‘வீட்டுக்கு கால் பண்ணப்போறேன். கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடப்போறேன்’ என்றாள்.
சுபா மகிழ்ச்சியில் குதித்தாள். கலையை கட்டிப் பிடித்துக்கொண்டாள்.
‘சரி சரி உடனே கால் பண்ணு என்றாள்’ அவளே எண்களைத் தட்டி கலையிடம் நீட்டினாள்.
‘ரிங் போகுது.’ என்றாள்.
கலையின் தங்கை தொலைபேசியில் இணைந்துகொண்டு ‘ஹலோ’ என்றாள்.
‘நான் கலை பேசறேன்’
‘ம்ம்ம்.. சொல்லு கலை நல்லாயிருக்கியா?’
‘நல்லாயிருக்கேன். அப்பா இருக்காரா?’
‘இருக்காரு,’ என்றவள் மெதுவான குரலில், ‘நான் உனக்கு ஃபோன் பண்ணினது அப்பாக்குத் தெரியாது. நீயும் காட்டிக்காத’ என்றாள்.
‘காட்டிக்கிட்டாலும் பரவாயில்லை, அப்பா கோவிச்சுக்க மாட்டாரு. அவர்ட்ட கல்யாணத்துக்கு சம்மதம்-னு சொல்லப்போறேன்’ என்றாள்.
‘சரி சரி’ என்ற கலையின் தங்கை, ‘என்னது, என்ன சொன்ன? திரும்பச் சொல்லு?’ என்று ஆச்சரியப்பட்டாள்.
‘ஆமா, கல்யாணத்துக்குச் சம்மதம்-னு சொல்லத்தான் கால் பண்ணினேன்’ என்றாள் கலை.
‘ம்ம்ம்மா, கலை கல்யாணத்துக்கு ஓக்கே சொல்லிட்டா…..’ என்று கத்தினாள் கலையின் தங்கை.

6
7.22 ரயிலில் கோபமாக ஏறினான் மாதவன்.
‘நேத்து உனக்காக என் ஃப்ரெண்ட் பைக்க வாங்கி, பெட்ரொல் போட்டுகிட்டு ரெண்டு மணி நேரம் ஸ்டேஷன் வாசல்லயே காத்துகிட்டு இருந்தேன்.’ என்று பொறிந்தான்.
‘நான் தான் அப்போவே சொன்னேனே வர மாட்டேன்னு, நீ பைக்க கொண்டு வந்துட்டா நான் வந்துடனுமா?’
‘அப்புறம் ஏன் பைக்ல போகணும்னு ஆசை. புத்தகம் சாப்பாடுப் பை எதுவும் இல்லாம நீயும் நானும் மட்டும் போகணும். ரொம்ப தூரம் போகணும்-னெல்லாம் சொன்ன?’ என்றான்.
‘இப்பவும்தான் சொல்றேன். உன் கூடப் போகணும்-ன்னு அதுக்காக, மறுநாளேவா?’
‘உனக்காக ஆஃபீஸ்க்கு லீவு போட்டுட்டு வந்து உக்காந்திருந்தேன்.’
‘நானா லீவு போடச் சொன்னேன். காலேஜ் நாள்ல எவ்ளோ பேர் பஸ்ல காலேஜ்க்கு வர்றாங்க. பைக்ல வர்றாங்க, ஆட்டோல வர்றாங்க. அவங்கள்ல யாராவது ஒரு தெரிஞ்சவன் நம்மளைப் பார்த்துட்டு என் மாமாட்ட போய் சொன்னா என்னாகும்? தாம்பரம் ஏரியால மாமாவுக்குத் தெரிஞ்சவங்க நெறைய பேர் இருக்காங்க. யாராவது பார்த்தாங்கன்னா அவ்ளோதான்’
‘என்னாகும்? உங்க மாமாக்கு என்னிக்காவது ஒருநாள் தெரிய வேண்டியதுதான, இப்போவே தெரியட்டுமே!!’
‘எதுக்கெடுத்தாலும் கோவப்படாத. அதோ பாரு, ஒரு அம்மா உக்காந்திருக்குப் பாரு, அஞ்சாறு மாச கர்பமா இருக்கும்-னு நெனைக்கறேன். என்னிக்காவது ஒருநாள் கொழந்தை பொறக்கத்தான போகுது, இன்னிக்கே பொறக்கட்டுமே-ன்னு இன்னிக்கே பெத்துக்க முடியுமா?’
‘…’
‘இன்னும் ஒரு செமஸ்ட்டர்தான் இருக்கு. அதை நான் ஒழுங்கா முடிக்கணும். அதுவரைக்கும் நாம ஜாக்ரதையாத்தான் இருக்கணும்’
‘…’
மாதவன் எதுவும் பேசவில்லை. முகத்தில் சிரிப்பு காணாமல் போயிருந்தது. இருவரும் வேவ்வேறு திசைகளைப் பார்த்தபடி பயணித்தார்கள்.
சில நிமிட அமைதிப் பயணத்துக்குப்பின்.
‘சரி சரி. ரொம்ப சோகமாய்டாத. நாளைக்குப் போலாம். ஆனா, கோடம்பாக்கத்துக்கு வராத. பைக்க எடுத்துக்கிட்டு வண்டலூர் வா. காலேஜ் பக்கம் இல்ல. ரயில்வே ட்ராக்குக்கு அந்தப்பக்கம் வந்து நில்லு. நான் வர்றேன்.’
மாதவன் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி வரவும் சானட்டோரியம் ஸ்டேஷன் வரவும் சரியாக இருந்தது.

7
லுஃப்தான்ஸா விமானம் சென்னை வந்து இறங்கியது. ஆறு வருடங்களுக்குப் பிறகு இந்தியக் காற்றை சுவாசித்தாள் கலை. பெட்டிகளை சேகரித்துக்கொண்டு, பெட்டிகள் பாதுகாக்கும் அறைக்குச் சென்றாள். எல்லாப் பெட்டிகளையும் மாலைவரை பாதுகாக்கும்படி கொடுத்துவிட்டு வெளியில் வந்தாள். விமான நிலையத்திற்கு வரவேற்பதற்காக யாரையும் வரவேண்டாம் என்றும், மதுரைக்கு விமானத்திலேயே வந்துவிடுவதாகவும் முன்னமே சொல்லியிருந்தபடியால், வரவேற்க யாரும் வரவில்லை. டாக்ஸியில் ஏறி,
‘கோடம்பாக்கம் ஸ்டேஷன் போங்க’ என்றாள்.
ஸ்டேஷனில் நுழைந்து ‘பீச் டு தாம்பரம் மன்த்லி பாஸ் ஒன்று’ என்றாள்.
வாங்கிக்கொண்டு ரயிலில் ஏறினாள். தாம்பரம் வரை சென்றாள். மீண்டும் அதே ரயிலில் கடற்கரை வரையிலும் சென்றாள். கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், தாம்பரத்திலிருந்து கடற்கரை என்று மாறி மாறி பயணித்தாள். ஓரமான இருக்கைகளாகப் பார்த்து அமர்ந்துகொண்டாள். நெடுநேரம் கண்களை மூடிக்கொண்டு பயணித்தாள். கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை அவ்வப்போது துடைத்துக்கொண்டாள். சில நேரம் ஜன்னலுக்கு வெளியே எதையோ தேடினாள். சில நேரம் ரயிலுக்குள் கைப்பிடிகளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். சில நேரம் அந்தக் கைப்பிடிகளைப் பிடித்துக்கொண்டு நின்றாள். ஒருவர் முகத்தையும் நேராகப் பார்க்காமல் தவிர்த்தாள்.
மாலைவரை ரயில்களில் மாறி மாறிப் பயணித்தாள். இரவு தொடங்கும் நேரத்தில் சானட்டோரியம் ரயில் நிலையத்தில் இறங்கினாள். அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தாள். அருகிலிருப்பவர்களுக்குத் தெரியாமல் அழுதாள். சிறிது நேரத்திற்குப் பின், மீண்டும் எழுந்து விமான நிலையத்தை நோக்கிப் பயணித்தாள். விமான நிலையத்தில் முகம் கழிவினாள். கண்ணாடியில் தன் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு நின்றாள். பெட்டிகளை மீண்டும் பெற்றுக்கொண்டு மதுரை விமானத்தில் ஏற உள்ளூர் விமான நிலையத்திற்குப் புறப்பட்டாள்.

8
மாதவன் அதிகாலையிலேயே புறப்பட்டான். நண்பனின் பைக்கை கடன் கேட்டு முதல் நாள் இரவே சாவியை வாங்கி வைத்துக்கொண்டான்.
‘ஞாபகம் வெச்சுக்க நண்பா, சாயங்காலம் ஏழு மணிக்குள்ள வந்துடு, ரொம்ப லேட் பண்ணிடாத’ என்றான் பைக் கொடுத்த நண்பன்.
‘ஆபத்துக்குக் கைக் கொடுத்த நண்பனை மறந்தாலும் மறப்பேன். பைக் கொடுத்த நண்பனை மறக்க மாட்டேண்டா!’ என்று சிரித்தபடி பைக்கில் புறப்பட்டான். காலை 8 மணிக்கே வண்டலூர் ரயில் நிலையத்திற்கு வந்து, எதிர்புறமாக சென்ற சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டான். அடுத்து வந்த ரயில்களையெல்லாம் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். மூன்று ரயில்கள் தந்த ஏமாற்றங்களை நான்காவது ரயில் துடைத்தெரிந்தது. கலை வந்தாள். வழக்கமாகச் சுடிதாரில் வரும் கலை இன்று புடவையில் தேவதைபோல் வந்தாள். மிக அருகில் வரும் வரையிலும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் மாதவன்.
‘என்ன ஆளையே முழுங்கிடறது மாதிரி பாக்கற?’ என்று கலை கேட்டவுடன்தான் இந்த உலகத்துக்கே வந்தவன் போல் சிலிர்த்தான்.
‘இல்ல பொடவையெல்லாம் கட்டிட்டு வந்திருக்கியா, அதான். புடவை கட்டிகிட்டு நீ நடந்து வர்றதைப் பாக்க ஆயிரம் கண் வேணும்’ என்று சிரித்தான்.
‘இப்பவே ஐஸ் வெக்காத, வண்டிய எடு’ என்றாள்.
மாதவன் பைக்கை உதைத்து உறுமச்செய்தான். புடவைத் தலைப்பை இழுத்துப் பிடித்தபடி பின்னால் ஏறி உக்கார்ந்தாள் கலை.
‘என்ன புடவையெல்லாம் கட்டிட்டு வந்திருக்க?’
‘ஆமா, பீச்சுக்குப் போனா சுடிதார் நனையாதா?’
‘பீச்சுக்கு போறோமா?’ என்று உற்சாகமாக பைக்கை கிளப்பினான் மாதவன்.
‘ஆமாம், மொதல்ல அங்கதான் போறோம்’ என்று அவன் மேல் சாய்ந்து அவனைக் கட்டிக்கொண்டாள். அவனது உற்சாகத்தில் மேலும் சில ‘ற்’ களைச் சேர்த்து உற்ற்ற்ற்சாகமாக்கினாள்.
‘புத்தகம் நோட்டு டிஃபன் பாக்ஸ்ஸெல்லாம் எங்கே?’ என்றான்.
‘இன்னிக்கு ஒன்னும் கெடையாது. வீட்ல, தியரி க்ளாஸ் கிடையாது. ப்ராக்டிகல் க்ளாஸ் மட்டும்தான் அதுனால தேவையில்லைன்னு சொல்லிட்டேன்’
‘ஆமாமா, இன்னிக்கு ஃபுல்லா ‘ப்ராக்டிகல்’ மட்டும்தான். அதுவும் நானே சொல்லித் தறப்போறேன்’-ன்னு சிரித்தான்
‘சீ, அசிங்கமா பேசாத!!’ என்று கடிந்துகொண்டாள் கலை.
வண்டலூரில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு பயணமானார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலையை அடைந்ததும் வேகத்தைக் கூட்டினான் மாதவன்.
‘ஏன் இவ்ளோ வேகமா போற, மெதுவா போ. மெதுவா பைக்ல போகறதுதான் என் ஆசையே!!’
‘இல்ல, பாதி நேரம் பைக்லயே போய்ட்டா அப்புறம் ‘ப்ராக்டிகல்’-க்கு டைம் இருக்காதே’ என்று சொல்லி இடுப்பில் கிள்ளு வாங்கிக்கொண்டான் மாதவன். வேகத்தைக் குறைத்து, ஆட்கள் நடமாட்டமில்லாத சவுக்குத் தோப்பிற்குள் வண்டியை செலுத்தினான். வண்டியை நிறுத்திவிட்டு கடற்கரையை நோக்கி நடந்தார்கள். தண்ணீரில் சிறிது நேரம் கால் நனைத்து நின்றார்கள். பிறகு கொஞ்ச தூரம் கை கோர்த்துக்கொண்டு நடந்தார்கள்.
‘உன் கை பஞ்சு மாதிரி இருக்கே!! உள்ளே எலும்பு இருக்கா இல்லையா?’ என்றான் மாதவன்.
வெடுக்கெனக் கையை விடுவித்துக்கொண்டாள் கலை.
திரும்பவும் கையைப் பிடித்து இழுத்து தன் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, ‘இந்தக் கையை நான் வாழ்நாள் முழுக்க பிடிச்சுக்கணும்’ என்றான். கலை வெட்கப்பட்டாள், இப்பொழுது கையை விடுவித்துக்கொள்ளவில்லை.
இருவரும் தண்ணீரில் கால் நனைய நடந்தார்கள். கடற்கரைச் சாலைக்கு வந்து இளநீர் குடித்தார்கள். மீண்டும் கடலுக்குச் சென்று கால் நனைத்தார்கள், நடந்தார்கள். பின்னர் சவுக்கு தோப்பின் முகப்பில் கடலைப் பார்த்தபடி உக்கார்ந்தார்கள்.
‘சரி, உன் ஆசையை நிறைவேத்தினதுக்கு எனக்கு என்ன கொடுக்கப்போற?’
‘ஆசை பைக்ல கூட்டிட்டு வந்ததோட முடிஞ்சுடல. திரும்பவும் என்னைக் கொண்டுபோய் ஸ்டேஷனில் இறக்கி விடறப்போதான் முடியும். அப்போ வேணும்னா ஒரே ஒரு முத்தம் தர்றேன். அதுவும், ஆக்ஸிலேட்டர் கொடுத்த கைக்கு மட்டும்’ என்று சொல்லிச் சிரித்தாள்.
‘எனக்கு வேண்டாம், எனக்குக் குடுக்க வேண்டியதை உதட்டுக்குக் கொடுத்துடு-ன்னு கை சொல்லிட்டா?’
‘இந்த ட்ரான்ஸ்ஃப்ர் எல்லாம் இங்க கிடையாது. வேணும்னா வாங்கிக்க சொல்லு, இல்லைன்னா அதுவும் இல்லை, அவ்ளோதான்’
‘ஓகே, ஓகே. கையே வாங்கிக்குதாம்!!’
‘அது சரி, என் ஆசையை நிறைவேத்தறதுக்காக பைக்ல கூட்டிட்டு வந்துட்ட, உன் ஆசை என்னன்னு சொல்லு’ என்றான்.
‘எனக்கு ஒன்னும் பெரிய ஆசையெல்லாம் இல்லை. ஒவ்வொரு தடவையும் உன்ன விட்டுட்டு சானட்டோரியம் ஸ்டேஷன்ல எறங்கற ஃபீலிங் இருக்குபாரு. அதை வார்த்தையால சொல்ல முடியாது. எழுத்தால எழுதவும் முடியாது. ஒவ்வொரு தடவை இறங்கும்போதும், ச்ச, இன்னிக்கு ஆபீஸ் போகணுமா? லீவு விட மாட்டாங்களா, அப்டியே உன் கூடவே தாம்பரம் போக மாட்டேனா. அங்கெயிருந்து ரெண்டுபேரும் பீச் போற ரயில்ல ஏறி அப்டியே பீச் ஸ்டேஷன் வரைக்கும் போக மாட்டோமான்னு இருக்கும். அதுனால, ஒரு நாள் முழுக்க, பீச் ஸ்டேஷன்ல இருந்து தாம்பரம் வரைக்கும், உன் பக்கத்துலயே உக்காந்துகிட்டு மாறி மாறி போய்ட்டே இருக்கணும். அவ்ளோதான் என் ஆசை.’
‘ச்சீ, இவ்ளோதானா?’
‘என்ன ச்சீ? எனக்குத்தான் தெரியும் சானட்டோரியத்துல எறங்கற வலியும், உன் பக்கத்துலயே உக்காந்துகிட்டு நாள்பூரா ட்ரெயின்ல போற சுகமும்!!’
‘சரி, அதுதான உன் ஆசை. நிச்சயமா ஒரு நாள் நிறைவேத்திடலாம். இப்போ களம்பு போகலாம்’
‘ஆக்ஸிலெட்டர் கொடுக்கற கைகள்ல எனர்ஜியே இல்ல. ஒன்னு குடுத்தின்னா எனர்ஜியா வண்டி ஓட்டும்’
‘இருக்கற எனர்ஜியை வெச்சு ஓட்டு அப்புறம் கொடுக்கறேன்’
இருவரும் புறப்பட்டார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலையில் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
‘பார்த்துப் போப்பா. எதிர்த்தாப்ல ஒரு கார் வேகமா கண்ட்ரோல் இல்லாம கன்னாபின்னான்னு வர்றான். ஏய்.. பாத்து பாத்து பாத்து’
எதிரில் வந்த கார் கட்டுக்கடங்காமல் ஓடி, மாதவன் ஓட்டிச்சென்ற பைக் மேல் மோதியதில், மாதவன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான். கலையின் காலில் பைக் சாய்ந்ததில் எலும்பு முறிந்தது. கால்களை இழுத்துக்கொண்டு நகர்ந்து, மாதவன் உடலருகில் சென்ற கலை, மாதவனின் கைகளைப் பிடித்து முத்தமிட்டுவிட்டு மயக்கமானாள்.

சரவ் (Sarav) எழுதியது | 8 responses so far

Next »